சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் மழை !

330

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று சூறைக்காற்றுடன் மழை பெய்துள்ளநிலையில், இடி, மின்னல் தாக்கியதில், ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தமிழகத்தில் சென்னை உட்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று மழை பெய்துள்ளது. சென்னையில் நேற்று இரவு சாரல் மழை பெய்தது.
சேலம் மாவட்டம் ஆத்தூர், கெங்கவல்லி,தலைவாசல், கூடமலை வீரகனூர் உள்ளிட்ட பகுதிகளில் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக கன மழை பெய்தது. சூறைக்காற்று, இடி, மின்னலுடன் பெய்த மழையால் சாலைகளில் வெள்ள நீர் பெருக்கெடுத்து ஓடியது.
இதேபோன்று கரூர் மாவட்டம் புகளூர், பரமத்தி, காந்திகிராமம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. இதனால் வெப்பத்தின் தாக்கம் குறைந்து, குளுமை நிலவியதால் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இதேபோல, காஞ்சிபுரம் பகுதிகளிலும் மழை பெய்ததால், மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
இதனிடையே, மதுரை திருமங்கலம் அருகே மின்னல் தாக்கியதில் 4 பேர் உயிரிழந்தனர். மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்த கூடக்கோயில் அருகே கள்ளிக்குடி என்ற பகுதியில் திடீரென மின்னல் தாக்கியதில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்திவருகின்றனர்.
இதேபோல, விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள கல்லாநத்தம் பகுதியை சேர்ந்த சின்னதம்பி என்பவர், தனது வயலில் வேலை செய்து கொண்டிருந்தபோது, எதிர்பாராத விதமாக பலத்த சூறைக்காற்று, இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்தது. அப்போது, இடி தாக்கியதில், சின்ன தம்பி, உடல் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில், கும்பகோணத்தில் நகரிலும், சுற்றுப்புறங்களிலும், இடி, மின்னலுடன் நான்கு மணி நேரத்திற்கு மேலாக கொட்டிய மழையால், பல இடங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் நீங்கி, குளுகுளுவென கும்பகோணம் நகரம் மாறியதால், மக்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்தனர்.