சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல்..!

795

சென்னையில் நாளை முதல் 3 நாட்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கடந்த டிசம்பர் 31ஆம் தேதி தனது அரசியல் பிரவேசம் குறித்த அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், வரும் சட்டசபை தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ளார். மேலும், முறையான கட்சி அறிவிப்பு வெளியாகும் வரை, தினசரி அரசியல் குறித்து பேச வேண்டாம் என்று ரசிகர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
இந்த நிலையில், கட்சி சின்னம், பெயர் குறித்து இதுவரை எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. ஆனால், ரஜினிகாந்தின் இணையதளம் மட்டும், ரஜினி மக்கள் மன்றம் என்ற பெயரில் இயங்கி வருகிறது. ஏற்கெனவே, வேலூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் ரஜினி மக்கள் மன்றத்திற்கு நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மற்ற மாவட்டங்களுக்கு கூடிய விரைவில் பொறுப்பாளர்கள் நியமிக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், தற்போது ரஜினிகாந்த், இந்த மாதம் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளை சந்திக்க உள்ளதாகவும், நாளை முதல் 3 நாட்களுக்கு சென்னையில் இந்த சந்திப்பு நடைபெறும் எனவும் ரஜினி ரசிகர் மன்ற தலைவர் சுதாகர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின்போது, கட்சி தொடர்பாக முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.