தென்மேற்கு பருவ மழை தீவிரமடைந்துள்ளதை அடுத்து, சென்னை உட்பட தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது தொடர்ந்து மழை பெய்து வருகிறது.

289

தென்மேற்கு பருவமழை காரணமாகவும், வெப்பச் சலனம் காரணமாகவும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது. சென்னையில் இரவு முதல் கிண்டி, நுங்கம்பாக்கம், ஆவடி அம்பத்தூர், முகப்பேர், பாடி, தாம்பரம், குரோம்பேட்டை உள்ளிட்ட பல இடங்களில் காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, பல பகுதிகளில் போக்குவரத்து முடங்கியதால், காலையில் பள்ளி , அலுவலகம் செல்பவர்கள் அவதிக்குள்ளாகினர். மழை காரணமாக சென்னை விமான நிலையத்தில் 12 விமானங்கள் தாமதமாக வந்தன. மேலும் 16 விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. காஞ்சிபுரம், திருவள்ளுர் மாவட்டங்களிலும் இரவு முதல் மழை பெய்து வருகிறது.
இதனிடையே, சென்னையில் சாலைகளில் தாழ்வான பகுதிகளில் தேங்கியுள்ள மழைநீரை அகற்றும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் துரிதமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், கோவை, நீலகிரி மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. வால்பாறை பகுதியில் கடந்த 10 நாட்களாக பெய்து வரும் மழையால், கடும் குளிர் நிலவி வருகிறது. அண்ணா நகரில் சீனி என்பவரின் வீடு மழையின் காரணமாக இடிந்து விழுந்து பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது. கனமழை காரணமாக வால்பாறை தாலுகாவில் உள்ள பள்ளி, கல்லுாரிகளுக்கு இன்று விடுமுறை அளித்து கோவை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதேபோல் நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கூடலுார், பந்தலுார் தாலுகாவில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் உருவான மேலடுக்கு காற்றுசுழற்சி மேலும் வலுவடைந்து தீவிர காற்றழுத்தமாக மாறியுள்ளதாக கூறியுள்ள சென்னை வானிலை ஆய்வு மையம், இன்றும் மழை தொடரும் எனவும், அடுத்த சில தினங்களுக்கு மழை நீடிக்கும் என்றும் தெரிவித்துள்ளது.