சென்னையில் விடியவிடிய வெளுத்து வாங்கிய கனமழையால் நகரமே தண்ணீரில் மிதந்து தத்தளித்து வருகிறது…!

376

சென்னையில் நேற்று மாலை முதல் விடியவிடிய வெளுத்து வாங்கிய கனமழையால் நகரமே தண்ணீரில் மிதந்து தத்தளித்து வருகிறது.
சென்னையில் நேற்று மாலை 4 மணிக்கு மேல் தூறலுடன் தொடங்கிய மழை, மிக கனத்த மழையாக மாறி, இடைவிடாது, விடியவிடிய வெளுத்து வாங்கியது. இதன் காரணமாக, ராதா கிருஷ்ணன் சாலை, ஆற்காடு ரோடு, 100 அடி ரோடு, பூந்தமல்லி ஹைரோடு உள்ளிட்ட முக்கிய சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல காணப்படுகிறது. சுரங்கப்பாதைகளை மழைநீர் மூடியதால், வாகனங்களில் செல்லமுடியாமல் மக்கள் தவித்தனர். சைதாப்பேட்டை, தாம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் வாகனங்கள் மெல்ல ஊர்ந்து சென்றன. அநேக இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் காணப்படுகிறது. மேலும் தண்டவாளத்தில் மழை நீர் தேங்கியுள்ளதால் புறநகர் மின்சார ரயில்கள் வேகம் குறைக்கப்பட்டது.
இதேபோல், வடபழனி குமரன் காலனியில் உள்ள வீடுகளுக்குள் வெள்ளநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதி மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மழை நீருடன் கழிவு நீரும் கலந்து இருப்பதால் புழுக்கள் உருவாகியுள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
அதிகபட்சமாக, நுங்கம்பாக்கத்தில் 11 சென்டி மீட்டர் மழையும், துரைப்பாக்கத்தில் 10 சென்டி மீட்டர் மழையும் பதிவாகியுள்ளது. தொடர் கனமழை காரணமாக, பக்கிங்ஹாம் கால்வாயில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உடைந்ததால், மயிலாப்பூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் புகுந்துள்ளது. வீடுகள் கடைகள் என அனைத்து இடங்களிலும் தண்ணீர் புகுந்துள்ளதால், மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும், கனமழை மற்றும் வெள்ளப்பெருக்கால் மயிலாப்பூர் பகுதியில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளநிலையில், போக்குவரத்தும் முடங்கியுள்ளது.
முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தொடர்மழை காரணமாக நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பள்ளிகளுக்கும் புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது.