ஆம்னி பேருந்து உரிமையாளர்கள், பயணிகளிடம் அதிக பணம் வசூலிப்பதைத் தடுக்க, பயண கட்டண விவரத்தை பேருந்துக்குள் இடம்பெறச் செய்யவெண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

210

ஆம்னி பேருந்துகளில் அதிக கட்டணம் வசூலிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, கோபிகா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார். அந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அதிக கட்டணம் அதிகம் வசூலிக்கும் ஆம்னி பஸ் குறித்து பொதுமக்கள் புகார் செய்ய வசதியாக, இலவச தொலைபேசி எண்களை அறிவிக்கவேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்ததாக அரசு தரப்பு வழக்கறிஞர் தனது வாதத்தை முன்வைத்தார். அதன்படி, 044-24749001, 044-26744445 என்ற தொலைபேசி எண்களை தமிழக அரசு அறிவித்துள்ளதாகவும் வழக்கறிஞர் தெரிவித்தார்.
அதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், பேருந்துக் கட்டண விவரம், பொதுமக்கள் புகார் செய்யவேண்டிய தொலைபேசி எண்கள் ஆகியவவை, பேருந்து நிலையங்களில் மட்டுமின்றி, பேருந்துகளுக்கு உள்ளளும் இடம்பெறச் செய்திருக்கவேண்டும் என்று தெரிவித்தனர். தமிழக அரசு இதுதொடர்பான அரசாணையை ஒரு மாதத்துக்குள் வெளியிடவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.