சென்னையில், சிறுவனை ஏமாற்றி நூதன முறையில் ஏடிஎம் மையத்தில் இருந்து பணத்தை கொள்ளையடித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புதுவண்ணாரப்பேட்டை ஜீவா நகரை சேர்ந்த ஜெயலஷ்மியின் மகன் சிபியிடம், ஏடிஎம் மையத்தில் இருந்து 5 ஆயிரம் ரூபாய் பணம் எடுத்து வரச்சொல்லி அனுப்பியுள்ளார். இதனையடுத்து, ஏடிஎம் மெஷினில் பணம் எடுக்க முயன்ற போது பணம் வராததால் அந்த சிறுவன் திகைத்துள்ளான். இதனை நோட்டமிட்ட ஒருவர், ஏடிஎம் கார்டை வாங்கி, 2 ஆயிரம் ரூபாய் மட்டுமே வந்ததாக அவனிடம் கொடுத்துள்ளார். இதனையடுத்து, வீட்டிற்கு சென்ற சிறுவன், ஏடிஎம் மையத்தில் நடந்ததை தாய் ஜெயலஷ்மியிடம் தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து, செல்போனில் உள்ள எஸ்எம்எஸ்-ஐ பார்த்தபோது 11 ஆயிரம் ரூபாய் எடுத்துள்ளதாக தகவல் வரவே, அவர் அதிர்ச்சியடைந்துள்ளார். இதுதொடர்பாக காவல்நிலையத்தில் புகார் தெரிவித்ததை அடுத்து, ஏடிஎம் மையத்தில் உள்ள சிசிடிவி-யில் பதிவான வீடியோவை வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது காசிமேடு பல்லவன் நகர் பகுதியை சேர்ந்த தண்டபாணி என்பவர் தான், நூதன முறையில் பணத்தை கொள்ளையடித்தது தெரியவந்தது. குற்றவாளியை கைது செய்த போலீசார், அவனிடம் இருந்து 7 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.