சென்னையில் சுதந்திர தின கொண்டாட்டம் | அரசு அலுவலகங்களில் மூவர்ண கொடியேற்றி மரியாதை

272

சென்னையின் பல்வேறு இடங்களில் சுதந்திர தின கொண்டாட்டம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆட்சியர் சீதா லட்சுமி மூவர்ண தேசிய கொடியை ஏற்றி வைத்து ஆயுதப்படை காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். அதனை தொடர்ந்து சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்ட தியாகிகளுக்கு மரியாதை செலுத்திய அவர், மாற்றுத் திறனாளிகளுக்கும், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள குடும்ப பெண்களுக்கும் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். சென்னை துறைமுக வளாகத்தில் துறைமுக தலைவர் ரவீந்திரன் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அப்போது அவர், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர், துறைமுக தீயணைப்பு படையினர் மற்றும் மாணவர்களின் அணிவகுப்புகளை பார்வையிட்டார் .தொடர்ந்து சமாதானத்தை வலியுறுத்தும் விதமாக புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிடப்பட்டன.

இதேபோல், சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் ரிப்பன் மாளிகை வளாகத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து மாணவ மாணவிகளின் அணிவகுப்பு மற்றும் கலை நிகழ்ச்சிகளை அவர் பார்வையிட்டார். சென்னை சென்ட்ரல் ரயில்வே பொது மேலாளர் அலுவலகத்தில் சுதந்திர தின விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. சென்னை ரயில்வே கோட்ட மேலாளர் மகேஷ், தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். இதைத் தொடர்ந்து ரயில்வே காவல்துறையினர் மற்றும் சாரணர் இயக்கத்தை சேர்ந்தவர்களின் அணிவகுப்பு மரியாதையை அவர் ஏற்றுக் கொண்டார்.