8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!

208

சேலம் 8 வழிச்சாலைக்காக நிலம் கையகப்படுத்தும் பணிக்கு தடை விதிக்க முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை – சேலம் 8 வழி பசுமைச்சாலை அமைக்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். நிவாரணம், மாற்று நிலம் வழங்க தமிழக அரசு முன்வந்த நிலையிலும், விவசாயிகள், பொதுமக்கள் இந்த திட்டத்தை எதிர்த்து வருகின்றனர். இதனிடையே, தருமபுரியை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அந்த மனுவில் சுற்றுச்சூழல் குறித்து ஆய்வு மேற்கொள்ளாமல், சேலம் 8 வழிச்சாலை திட்டத்திற்கு தமிழக அரசு நிலம் கையகப்படுத்துவதாக அவர் குற்றச்சாட்டினார். எனவே இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என்று மனுவில் கிருஷ்ணமூர்த்தி குறிப்பிட்டிருந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, 8 வழிச்சாலை திட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று நீதிபதி கல்யாணசுந்தரம் தெரிவித்தார்.

கிருஷ்ணமூர்த்தியின் மனுவை மற்ற வழக்குகளுடன் சேர்த்து பிறகு விசாரிக்கப்படும் என்று கூறிய நீதிபதி, வழக்கை 2 நீதிபதிகள் கொண்ட அமர்வுக்கு மாற்றி ஆணை பிறப்பித்தார். இதே போல் நேற்றும் பசுமை வழிச்சாலை திட்டத்தை எதிர்த்து தமிழ் மாநில காங்கிரஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி டி.ராஜா, 8 வழிச்சாலை திட்டத்தின் நோக்கம் மற்றும் பயன்பாடுகளை தெரியாமல் அதனை எதிர்க்க கூடாது என்று தெரிவித்தார். இரண்டு பெரு நகரங்களுக்கு இடையே அமைக்கப்படும் இந்த சாலையால் பன்னாட்டு தொழில் நிறுவனங்கள் தொடங்கப்பட்டு, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அதிகரிக்கும் என அவர் கூறினார்.