உயர்நீதிமன்ற வளாகத்தில் வாயில் கருப்புத்துணி கட்டி வழக்கறிஞர்கள் போராட்டம்! பெண் வக்கீல்களும் பங்கேற்பு!!

256

சென்னை, ஜூன்.30–
வழக்கறிஞர்கள் சட்ட விதியில் திருத்தம் கொண்டு வந்ததை திரும்பப்பெற கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் வாயில் கருப்பு துணி கட்டி ஆர்ப்பாட்டம் செய்தனர்.
வழக்கறிஞர்கள் சட்ட விதியில் கடந்த மாதம் சில திருத்தங்களை கொண்டு வந்து உயர் நீதிமன்றம் அறிவிப்பு வெளியிட்டது. இதற்கு தமிழகம் முழுவதும் உள்ள வழக்கறிஞர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
மாநிலத்தின் பல மாவட்டங்களில் கடந்த 1 ஆம் தேதி முதல் வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால், அங்குள்ள நீதிமன்றங்களில் வழக்கு விசாரணை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள், கடந்த செவ்வாய் கிழமை முதல் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆவின் பாலகம் நுழைவு வாயில் அருகே, நூற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் நேற்று ஒன்றுகூடி, வடக்கு கடற்கரை ரெயில் நிலையத்தில் ரெயில் மறியல் செய்ய சென்றனர்.
அப்போது, பாரிமுனை சந்திப்பு அருகே தயாராக இருந்த போலீசார், அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால், அங்கேயே கூடி நின்ற வழக்கறிஞர்கள், சட்ட விதியில் திருத்தம் கொண்டு வந்ததை திரும்பப்பெற கோரி கோஷமிட்டனர். சிறிது நேர ஆர்ப்பாட்டத்துக்கு பின்னர், வழக்கறிஞர்களை போலீசார் கைது செய்தனர்.
இந்த நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று காலை கூடிய வழக்கறிஞர்கள், வாயில் கருப்பு துணி கட்டிக் கொண்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். வழக்கறிஞர்களின் உரிமையை பறிக்கும் விதமாக கொண்டு வரப்பட்ட, திருத்த சட்ட விதிகளை திரும்பப் பெற வேண்டும். அதுவரை தங்களின் போராட்டம் ஓயாது என்று சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்க செயலாளர் அறிவழகன் தெரிவித்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சென்னை உயர் நீதிமன்றம் வழக்கறிஞர்கள் சங்கத்தின் துணை தலைவர் கினிமானுவேல், செயலாளர் அறிவழகன், முன்னாள் துணை தலைவர் முரளி, பெண் வழக்கறிஞர்கள் சங்கத் தலைவர் எஸ்.நளினி, முன்னாள் தலைவர் பிரசன்னா, செயலாளர் ரேவதி, வக்கீல் ஆர்.சுதா உள்ளிட்ட ஏராளமான வழக்கறிஞர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களின் இந்த போராட்டத்தினால், நீதிமன்ற பணிகள் வெகுவாக பாதிக்கப்பட்டது. உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட அமர்வு நீதிமன்றங்கள், குடும்பநல நீதிமன்றங்கள், சிறப்பு நீதிமன்றங்களில் வழக்கறிஞர்களின் வருகை மிகக் குறைவாகவே காணப்பட்டது.