அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்யக்கூடாது – சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்.

566

அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்யக்கூடாது என்று தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
உயர் நீதிமன்றத்தில் அரசுத்தரப்பில் ஆஜராகும் வழக்கறிஞர்களை நியமனம் செய்வது குறித்த விதிகளை தமிழக அரசு கடந்த ஆண்டு உருவாக்கியது. அதில் வெளிப்படைத்தன்மை இல்லை எனக் கூறி, அந்த விதிகளை ரத்து செய்யுமாறு வழக்கறிஞர் வசந்தகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி அப்துல் குத்தூஸ் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, தலைமை வழக்கறிஞர், பொதுத்துறை, உள்துறை மற்றும் சட்டத் துறை செயலாளர்கள் அடங்கிய குழு தான் அரசு வழக்கறிஞர்களை நியமிப்பதாக தமிழக அரசுத்தரப்பில் வாதிடப்பட்டது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழக அரசு அறிவித்துள்ள விதிகள், நியமன விதிகளாகவே இருப்பதாக குறிப்பிட்டனர்.
இதனிடையே, விண்ணப்பங்களை பெற்று தகுதியானவர்களை அரசு வழக்கறிஞர்களாக நியமிப்பதற்கான நடைமுறை விதிகளை வகுத்து வெளியிட வேண்டும் என்று தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். அதேசமயம் அரசியல் காரணங்களுக்காக அரசு வழக்கறிஞர்களை நியமனம் செய்யக்கூடாது என்றும் அரசுக்கு அறிவுறுத்தினர்.