வாக்காளர் பட்டியலில் போலி வாக்காளர்களை நீக்க வேண்டும் என தமிழக தலைமை தேர்தல் அதிகாரியிடம் அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.

தமிழகத்தில் வரைவு வாக்காளர் பட்டியல் நாளை வெளியிடப்படுகிறது. இந்த நிலையில், வாக்காளர் பட்டியல் தொடர்பாக, சென்னை தலைமை செயலகத்தில், மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு தலைமையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி பிரதிநிதிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில், அதிமுக சார்பில் பொள்ளாச்சி ஜெயராமன், காங்கிரஸ் சார்பில் பீட்டர் அல்போன்ஸ், திமுக சார்பில் கிரிராஜன் மற்றும் தேமுதிக, பாஜக, இடது கம்யூனிஸ்ட், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சி பிரதிநிதிகள் கலந்துக்கொண்டனர். கூட்டத்தில், வாக்காளர் பட்டியல் முறையாக அமைக்கப்பட வேண்டும் என அதிமுக சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் பேசிய பொள்ளாச்சி ஜெயராமன் இதனை தெரிவித்தார்.

அதிமுகவை பொறுத்தவரை வாக்காளர் பட்டியலில், வாக்காளர்களை சேர்க்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார். வாக்குச்சாவடிக்கு ஒரு முகவர் அடையாள அட்டை வழங்க வேண்டும் என தேர்தல் ஆணையம் கேட்டுக்கொண்டுள்ளதாக கூறிய காங்கிரஸ் தலைவர் பீட்டர் அல்போன்ஸ், வாக்காளர்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக, ஆதாரத்துடன் புகார் அளித்தும், இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? எனவும் அவர் கேள்வி எழுப்பினார். பேசிய தலைமை தேர்தல் அதிகாரி, நாளை வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்றும், இறுதி வேட்பாளர் பட்டியல் ஜனவரி 4-ம் தேதி வெளியிடப்படும் என்றும் கூறினார். புதிதாக உருவாக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடிகளுக்கு முகவர்களை நியமனம் செய்யும்படியும் அரசியல் கட்சிகளுக்கு அவர் வேண்டுகோள் விடுத்தார்.