சென்னையில் வீட்டில் பதுக்கி வைத்த 2.25 கோடி போதை பொருள் சிக்கியது! கதவை உடைத்து அதிகாரிகள் பறிமுதல்; கடத்தல் தலைவன் தப்பி ஓட்டம்!!

256

சென்னை, ஜூலை.15–
சென்னையில் இன்று காலை ரூ. 2 1/4 கோடி மதிப்புள்ள போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டது. போதைப் பொருள் கடத்த முயன்ற ஆசாமிகளில் ஒருவன் கைது செய்யப்பட்டான். தப்பி ஓடிய கடத்தல் கும்பல் தலைவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் காரணமாக பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில் இன்று அதிகாலை உள்நாட்டு விமான நிலையத்தில் போதை பொருள் கடத்தப்படுவதாக மத்திய போதைப் பொருள் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலை முதலே சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசார் ரகசியமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். விமானப் பயணிகளிடம் தீவிர சோதனையும் நடத்தப்பட்டது. இந்நிலையில் இன்று காலை 2.30 மணியளவில் சென்னையில் இருந்து கொல்கத்தா செல்லும் இன்டிகோ விமானம் புறப்படத் தயாராக இருந்தது. பெரும்பாலான பயணிகள் விமானத்தினுள் ஏறி அமர்ந்து விட்டனர். அப்போது மத்திய போதைப் பொருள் தடுப்பு புலனாய்வு அதிகாரிகள் சிலர் விமானத்தினுள் ஏறி சந்தேகத்துக்கிடமான பயணிகளை தனியே அழைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது சிவகங்கை மாவட்டம் இளையான் குடியைச் சேர்ந்த சிக்கந்தர் அலி (வயது 45) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டு அவரையும் சோதனைக்கு அழைத்தனர்.
ஆனால் சிக்கந்தர் அலியோ சோதனைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு அவர்களோடு கடும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டார். இதையடுத்து அவர் மீதான சந்தேகம் வலுத்தது. உடனடியாக அவரை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று அவரின் உடமைகளை சோதனையிட்டனர். அப்போது அவரது கைப்பைகளில் 4 கிலோ கேட்டமைன் போதைப் பொருள் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது.
உடனடியாக அவரது பயணத்தை ரத்து செய்து கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். அவ்விசாரணையில் அவர் சர்வதேச போதைப் பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது.
சென்னையிலிருந்து கொல்கத்தா சென்று அங்கிருந்து தரை மார்க்கமாக மியான்மர் சென்று அங்கிருந்து விமானம் மூலம் மலேசியாவுக்கு செல்ல திட்டமிட்டதும் தெரிந்தது. மேலும் அவர் கொடுத்த தகவலின் பேரில் திருவல்லிகேணி பகுதிக்குச் சென்று அங்குள்ள ஒரு வீட்டை முற்றுகையிட்டனர்.
அவ்வீடு பூட்டப்பட்டிருந்தது. வீட்டின் பூட்டை உடைத்து சோதனையிட்ட போது அங்கு 5 கிலோ போதைப் பொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதையடுத்து அங்கிருந்து தப்பி ஓடிய போதைப் பொருள் கடத்தல் கும்பலின் தலைவனாக கருதப்படும். முகமது என்பவரை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். பறிமுதல் செய்யப்பட்ட 9 கிலோ போதைப் பொருளின் சர்வதேச சந்தை மதிப்பு ரூ. 2 1/4 கோடியாகும்.