ஆவடி குழந்தைகள் காப்பகத்தில் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த காப்பக உரிமையாளர் உட்பட ஊழியர்கள் 3 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஆவடி அடுத்த திருமுல்லைவாயில் சரஸ்வதி நகர் ஏழாவது தெருவில் செயின்ட் அண்ணா மழலையர் மற்றும் துவக்கப் பள்ளியுடன் இணைந்த குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. காப்பக ஊழியர்கள் பாலியல் தொல்லை தருவதாக சிறுமி ஒருவர், அரசுப்பள்ளியில் நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு குறைதீர்க்கும் முகாமில் புகார் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து, முகாமை நடத்திய நீதிபதிகள் அனிதா ஆனந்த், சௌந்தரியா, அருள் சபாபதி ஆகியோர் காப்பகத்தில் அதிரடி ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர். இதில், சிறுமி தெரிவித்த பாலியல் புகார் உறுதியானதை அடுத்து, காப்பகத்தில் இருந்த 29 குழந்தைகள் பொத்தூரில் உள்ள மரியாலயா காப்பகத்திற்கு மாற்றப்பட்டனர். இதனையடுத்து, காப்பக உரிமையாளர் மற்றும் ஊழியர்கள் இரண்டு பேரை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.