கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றம்..!

233

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில், கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் ஸ்டாலின் தலைமையில், பொதுச் செயலாளர் அன்பழகன் முன்னிலையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டத்தில், முதன்மை செயலாளர் துரைமுருகன் , துணை பொதுச் செயலாளர்கள் பெரியசாமி, வி.பி.துரைசாமி, சுப்புலட்சுமி ஜெகதீசன் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி , செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றுள்ளனர். திமுகவின் செயற்குழு உறுப்பினர்கள் ஆயிரத்து 400 பேரும் கூட்டத்தில் கலந்துக்கொண்டுள்ளனர்.

கூட்டம் தொடங்கியவுடன், கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த இரங்கல் தீர்மானத்தை திமுக எம்.பி. டி.கே.எஸ்.இளங்கோவன் வாசித்தார். தொடர்ந்து பேசிய அவர், கருணாநிதி நிகழ்த்திய சாதனைகளையும் பட்டியலிட்டார். திமுக தொண்டர்கள் அனைவரும் தன்னுடன் இருப்பதாக கூறிய மு.க.அழகிரியின் பேட்டிக்கு பின், நடைபெறும் இந்த செயற்குழுக் கூட்டம் தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. கருணாநிதி மறைவுக்கு இரங்கல் தெரிவிக்க கூட்டம் நடைபெறுவதாக கூறப்பட்டாலும், கூட்டத்தில் பொதுக்குழு தேதி குறித்தும், அடுத்த தலைவரை தேர்வு செய்வது தொடர்பாகவும், கட்சியில் நிர்வாகிகள் மாற்றம் குறித்தும் முக்கிய முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.