சத்தீஷ்கர் அரசு மருத்துவமனையில் 3 குழந்தைகள் உயிரிழப்பு!

299

சத்தீஷ்கர் மாநிலம் ரெய்ப்பூர் அரசு மருத்துவமனை ஊழியர் குடிபோதையில், கொள்கலனில் ஆக்சிஜன் நிரப்பாததை அடுத்து, சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 3 குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்தன.
சத்தீஸ்கர் மாநிலம், ராய்ப்பூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் நினைவு அரசு மருத்துவமனையில் வெவ்வேறு தொந்தரவுகளுக்கு சிகிச்சைப் பெறுவதற்காக, 3 பச்சிளம் குழந்தைகள் அனுமதிக்கப்பட்டிருந்தன. 3 குழந்தைகளுக்கும் சிறப்பு கண்காணிப்பு பிரிவில், செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த 3 குழந்தைகளும் அடுத்தடுத்து உயிரிழந்தன. இந்நிலையில், பச்சிளம் குழந்தைகளுக்கு சரியான முறையில் ஆக்சிஜன் வழங்கப்படாததே, அவர்களின் மரணத்துக்கு காரணம் என்று குழந்தைகளின் உறவினர்கள் குற்றம் சாட்டினர்.
இதுதொடர்பான முதற்கட்ட விசாரணையில், குடிபோதையில் இருந்த மருத்துவமனை ஊழியர், கொள்கலனில் ஆக்சிஜன் குறைந்ததும், நிரப்பாமல் விட்டதே காரணம் என தெரியவந்துள்ளது. இதனையடுத்து, ஊழியர் ரவி சந்திராவை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் ரெய்ப்பூர் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.