நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7ஆம் தேதி தரையிறங்கும் – இஸ்ரோ தகவல்

180

நிலவின் தென் துருவத்தில் சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7ஆம் தேதி தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் இந்தியாவின் அதிக திறன்கொண்ட ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 22-ஆம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது. புவி சுற்றுவட்டப் பாதையில் வலம் வந்துகொண்டிருந்த விண்கலம், ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை 5 முறை படிப்படியாக நிலை உயர்த்தப்பட்டது.

இதனைத்தொடர்ந்து, வெற்றிகரமாக பயணித்து வரும் சந்திராயன் 2 விண்கலம், ஆகஸ்ட் 20 ஆம் தேதி நிலவின் சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட்டு, செப்டம்பர் 1ஆம் தேதி வரை, படிப்படியாக அதன் உயரம் குறைக்கப்பட்டு, பின்னர், நிலவில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் நிலைநிறுத்தப்படும்…..

பின்னர் செப்டம்பர் 2ஆம் தேதி ஆர்பிட்டரில் இருந்து லேண்டர் அமைப்பு தனியாக பிரிக்கப்பட்டு, 4 நாட்கள் நிலவைச் சுற்றி வரும். இதனையடுத்து, செப்டம்பர் 7ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் லேண்டர் தரையிறங்கும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக, இஸ்ரோ தனது டுவிட்டரில், செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 2 விண்கலம் தரையிறங்கும் என பதிவிட்டுள்ளது. நிலவில் சந்திராயன் 2 விண்கலம் என்ன செய்யப்போகிறது? என்பதை அறிய காத்திருங்கள் எனவும் இஸ்ரோ தெரிவித்துள்ளது.