ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தல் : போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை

259

தருமபுரி அருகே ரியல் எஸ்டேட் அதிபர் கடத்தப்பட்டுள்ளதாக, காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி காந்திநகரை சேர்ந்த உதயகுமார், ரியல்எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். பணி நிமித்தமாக வெளியில் சென்ற அவர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை என தெரிகிறது. இதனையடுத்து செல்போன் மூலம் உதயகுமாரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது, மொபைல் போன் அணைத்து வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் எஸ்.வி.சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் முன்பு உதயகுமாரின் கார்மட்டும் நின்றிருப்பதாக உறவினர்களுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து அங்கு சென்ற உறவினர்கள், காருக்குள் பார்த்தபோது உதயகுமாரின் சட்டை பொத்தான்கள் சிதறிக் கிடந்தது. இதனால் தனது கணவரை சில மர்மநபர்கள் கடத்தி சென்றிருக்கலாம் என கூறி, சாந்தி போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ள போலீசார், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை சோதனை செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.