அமெரிக்காவால் ஏற்படும் எத்தகைய தாக்கத்தையும் சந்திக்க, இந்தியா தயார்!

149

ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதிக்கு, அமெரிக்கா விதித்துள்ள தடையால் உண்டாகும், எத்தகைய தாக்கத்தையும் சமாளிக்க, இந்தியா தயாராக உள்ளதென, மத்திய அரசு தெரிவித்துள்ளது.

2015 ஆம் ஆண்டில், அமெரிக்காவின் அப்போதைய அதிபர் ஒபாமாவின் முயற்சியால், ஈரான் அணுசக்தி தடை ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிலையில், 2017 ஆம் ஆண்டில், அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற, டொனால்டு டிரம்ப், ஒப்பந்தத்தை மீறி, அணு ஆயுத தயாரிப்பில் ஈரான் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார். இதையடுத்து, ஒப்பந்தத்தை முறித்த டிரம்ப், 2018 ஆம் ஆண்டு, மே மாதம், ஈரான் மீது, மீண்டும் பொருளாதார தடைகளை கொண்டு வந்தார். அத்துடன், இந்தியா, சீனா உள்ளிட்ட அனைத்து நாடுகளும், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை, நிறுத்த வேண்டும் என்றும், ஆனால், ஈராக், சவுதி அரேபியாவை அடுத்து, ஈரானில் இருந்து, அதிக அளவில் கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா, அமெரிக்காவின் கோரிக்கையை ஏற்கவில்லை.

இந்த நிலையில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யக் கூடாது என, அமெரிக்கா அறிவித்துள்ளதால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு சரிந்துள்ளது. இது குறித்து, மத்திய வெளிவிவகாரங்கள் துறை செய்தி தொடர்பாளர் ரவீஷ் குமார் பேசுகையில், ஈரானிய கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்த, அமெரிக்காவின் முடிவால் ஏற்படும் எத்தகைய தாக்கத்தையும் சந்திக்க, இந்தியா தயாராக உள்ளது என்றும், இந்தியாவின் எரிசக்தி மற்றும் பொருளாதார நலனைக் கருத்தில் கொண்டு, அமெரிக்கா உட்பட, அனைத்து நாடுகளுடனும் கலந்து பேசி சுமூக தீர்வு காணப்படும் என்றும் குறிப்பிட்டார்.