மத்திய சுகாதாரத் துறை அதிரடி : 328 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை

349

புகழ்பெற்ற வலி நிவாரணிகள் உள்ளிட்ட ஆபத்து விளைவிக்கக் கூடிய 328 மருந்துகளுக்கு மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தடை விதித்துள்ளதாகவும், இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

2016-ஆம் ஆண்டு மார்ச் 10-ஆம் தேதி 344 மருந்துகளுக்கு மத்திய அரசு தடை விதித்தது. பின்னர் மேலும் 5 மருந்துகள் இந்த பட்டியலில் சேர்க்கப்பட்டது. இந்த தடையை எதிர்த்து மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உச்ச நீதிமன்றம் மற்றும் பல உயர் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்தன. இவ்வழக்கில் 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 15-ஆம் தேதி உத்தரவிட்ட உச்ச நீதிமன்றம், தடை விதிக்கப்பட்ட மருந்துகளை ஆய்வு செய்ய மருந்து தொழில்நுட்ப ஆலோசனை கழகத்தை கேட்டுக் கொண்டது. அதன்படி, மேற்கொள்ளப்பட்ட ஆய்வில், 349 மருந்துகளில் 328-ல் வேதி பொருட்களின் சேர்க்கை விதிகள் முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், இவை மக்களுக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது எனவும் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து தொடர் ஆய்வுகளுக்கு பிறகு தற்போது 328 மருந்துகளை தடை செய்வதாக மத்திய அரசின் சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அரசு தடை விதித்துள்ள மருந்துகளில் வலி நிவாரணியான சாரிடான், ஆன்டி பயோடிக்கான க்ளூகோநாம் பிஜி, டாசிம் ஏஇசட் உள்ளிட்ட புகழ்பெற்ற மருந்துகளும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.