காற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு முடிவு..!

91

டெல்லியில் காற்று மாசுபாடைக் குறைக்க செயற்கையாக மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

டெல்லியில் காற்றின் மாசு அபாய அளவிலேயே தொடர்வதால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமம் அடைந்துள்ளனர். காற்று மாசுபாடு மிகவும் மோசமான அளவுக்கு சென்றுள்ள நிலையில், பனிமூட்டமும் காணப்படுவதால், பொதுமக்கள் மூச்சுவிடுவதில் கூட கடும் சிரமம் அடைந்துள்ளனர். பனிகலந்த மாசு, சாலைகளை ஆக்கிரமித்துள்ளதால், பகலிலும் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றனர். காற்று மாசுபாடைக் குறைக்க பல்வேறு கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதும் டெல்லியில் காற்று மாசு குறையவில்லை.

இதன்காரணமாக, செயற்கை முறை மூலம் மழையை பொழிய வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. டெல்லியில் காற்று மாசு மோசமானால் அடுத்த நடவடிக்கையாக செயற்கை முறை மூலம் மழைய பொழிய வைக்கும் நடவடிக்கையை மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்படும் என்று சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் மகேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.