குட்கா ஊழல் முறைகேடு விவகாரம் : சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகள் 2 வது நாளாக சோதனை

121

குட்கா முறைகேடு விவகாரம் தொடர்பாக சென்னையில் சி.பி.ஐ அதிகாரிகள் 2 வது நாளாக சோதனை நடத்தினர்.

குட்கா ஊழல் குறித்த கிடங்கு உரிமையாளர் மாதவ்ராவிடம் கடந்த வாரம் சிபிஐ அதிகாரிகள் 12 மணி நேரம் விசாரணை மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், நேற்று காலை முதல் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீடு, டிஜிபி ராஜேந்திரன் வீடு, சென்னை மாநகர முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜின் வீடு உட்பட 35 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். இதில் பல இடங்களில் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனையடுத்து டிஜிபி ராஜேந்திரன், அமைச்சர் விஜயபாஸ்கர் வீடுகளில் நடைபெற்ற சோதனை நிறைவு பெற்றது. இருப்பினும் நொளம்பூரில் உள்ள முன்னாள் காவல் ஆணையர் ஜார்ஜ் வீட்டில் சி.பி.ஐ அதிகாரிகள் இன்று 2 வது நாளாக சோதனை நீடித்தது.

காலை 8 மணி வரை நடத்திய சோதனையில் 2 பைகளில் முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது. இதே போல் முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா வீட்டிலும் சி.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்தனர். இதனிடையே குட்கா ஊழல் தொடர்பான சோதனை குறித்து சி.பி.ஐ அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில் சென்னை, திருவள்ளூர், தூத்துக்குடி, புதுச்சேரி, பெங்களூரு, மும்பை உள்பட 35 இடங்களில் போலீஸ் துறையை சார்ந்த அதிகாரிகளின் வீடுகளில் சோதனை நடந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குட்கா தடை உத்தரவு அமலில் இருந்த போது, கடந்த 2013ம் ஆண்டு தமிழகத்தை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்று, சட்டவிரோதமாக குட்கா தயாரிப்பதற்கும், விற்பனை செய்யவும் ஒழுங்குமுறை அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.