ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கில், டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக, முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இன்று நேரில் ஆஜரானார்.

ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனத்துக்கு, அந்நிய நிதி முதலீடு தொடர்பாக சட்டவிரோதமாக அனுமதி பெற்றதாக அமலாக்கத்துறை மற்றும் சிபிஐ சார்பில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில், மத்திய நிதியமைச்சராக இருந்த தனது தந்தையின் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறி, அவரது மகன் கார்த்தி சிதம்பரத்திடம் விசாரணை நடைபெற்றது.

இதனைத்தொடர்ந்து, ப.சிதம்பரத்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார். இதனையடுத்து, இந்த குற்றச்சாட்டு தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ப.சிதம்பரம் இன்று நேரில் ஆஜரானார். குற்றச்சாட்டு தொடர்பாக, சிபிஐ அதிகாரிகளின் சரமாரி கேள்விகளுக்கு ப.சிதம்பரம் பதிலளித்து வருகிறார். ப.சிதம்பரத்தின் வாக்குமூலம் முழுவதும் பதிவு செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.