மத்திய அரசு காவிரி வரைவு அறிக்கையை இதுவரை தாக்கல் செய்யாததால் தமிழக விவசாயிகள் கொதிப்பு .

1761

தமிழகத்திற்கு 4 டி.எம்.சி தண்ணீர் தர கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மத்திய அரசு காவிரி வரைவு அறிக்கையை தாக்கல் செய்யாததால் தமிழக விவசாயிகள் கொதிப்படைந்துள்ளனர்.
காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வரைவு அறிக்கையை தாக்கல் செய்ய மே 3 ஆம் தேதி வரை மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கால அவகாசம் வழங்கியது. ஆனால், மேலும் 2 வார கால அவகாசம் கேட்டு மத்திய அரசு மனு தாக்கல் செய்தது. இந்த நிலையில் இன்று உச்சநீதிமன்றத்தில் காவிரி தொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தது.

ஆனால், இன்று மத்திய அரசு காவிரி வரைவு அறிக்கையை தாக்கல் செய்யவில்லை. பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால், வரைவு அறிக்கைக்கான ஒப்புதலை பெற முடியவில்லை என்று விளக்கமளித்த மத்திய அரசு, மேலும் 10 நாட்களுக்கு கால அவகாசம் கேட்டது. தேர்தலை காரணம் காட்டி மத்திய அரசு நடவடிக்கை எடுக்க தாமதப்படுத்துவதாக தமிழக அரசு வழக்கறிஞர் குற்றம்சாட்டினார்.

இருதரப்பு வாதங்களை கேட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அமர்வு, காவிரி விவகாரத்தில் அரசியல் காரணங்களை ஏற்க முடியாது என கூறினர்.
தமிழகத்திற்கு இந்த மாதத்திற்காக 4 டி.எம்.சி தண்ணீரை கர்நாடகா திறந்துவிட வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவை மீறினால் கர்நாடக அரசு கடும் விளைவை சந்திக்க நேரிடும் என எச்சரித்த நீதிபதிகள், வழக்கு விசாரணையை மே 8 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.