காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம்..!

639

காவிரி மேலாண் வாரியம் அமைக்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், புதுச்சேரியில், சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கியது. அவையில் ஆளுனர் கிரண்பேடி பேசியபோது, புதுச்சேரி மாநிலத்தில் ஜிஎஸ்டி மிக சிறப்பாக செயல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
ஆளுனர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்து, அதிமுக மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர். ஆளுனரை உரை முடிந்ததும், இடைக்கால பட்ஜெட்டை முதலமைச்சர் நாராயணசாமி தாக்கல் செய்தார். மேலும், இந்தக் கூட்டத்தில், காவிரி மேலாண் வாரியம் அமைக்க வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில், சபாநாயகரின் தடையை மீறி சட்டப்பேரவைக்குள் புதுச்சேரி நியமன எம்.எல்.ஏக்கள் சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோர் நுழைய முயன்றனர். அப்போது அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர்.
போலீசார் அனுமதியை மறுத்ததால் நியமன எம்.எல்.ஏக்கள் 3 பேரும் தர்ணாவில் ஈடுபட்டனர். அப்போது எம்எல்ஏ சங்கர் மயக்கமடைந்ததை அடுத்து, அவர் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். நியமன எம்எல்ஏ-க்களின் தர்ணா போராட்டம் காரணமாக, சட்டசபை வளாகத்தில் பரபரப்பு நிலவியது.