காவிரி நதிநீர் பங்கீடு வழக்கு மீதான விசாரணை 16ம் தேதிக்கு ஒத்திவைப்பு ..!

755

காவிரி விவகாரம் தொடர்பான வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தன. மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி. சிங், மேலாண்மை வாரிய வரைவு திட்டத்தை நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் கன்வில்கர், சந்திரசூட் அமர்வு முன் காவிரி வரைவு திட்டம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
காவிரி வாரியம், குழு அல்லது ஆணையம் அமைக்க தயாராக இருப்பதாக குறிப்பிட்ட யு.பி.சிங்,உச்சநீதிமன்றம் என்ன உத்தரவிட்டாலும் , அதனை செயல்படுத்த மத்திய அரசு தயாராக உள்ளதாக தெரிவித்தார். நடுவர் நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த காவிரி அமைப்பு அமைக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
வரைவு திட்டத்தில் இடம் பெற்றுள்ள அம்சங்களின் படி, காவிரி நீர் பங்கீட்டு அமைப்பில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் இடம்பெற்று இருப்பார்கள்.
மத்திய அரசு அமைக்கும் காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டு அல்லது 65 வயது வரை இருக்கும்.
பத்து பேர் கொண்ட நீர் பங்கீட்டு அமைப்பில், மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இடம்பெறுவார். இந்த அமைப்பில் இருவர் முழுநேர உறுப்பினர்களாக செயல்படுவார்கள்.
குழுவில் தலைவர், மத்திய அரசு அதிகாரிகள் 5 பேர், மாநில பிரதிநிதிகள் 4 பேர் இடம்பெறுவர். ஆணையத்திற்கான செலவுகளை நான்கு மாநில அரசுகளும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. காவிரி வரைவு செயல் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கிய பின் அரசிதழில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்ட நிலையில், விசாரணை 16ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.