புதுச்சேரியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் காவிரி மேலாண் வாரியம் உடனே அமைக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றம்..!

726

காவிரி மேலாண்மை வாரியத்தை தாமதமின்றி அமைக்க வேண்டும் என புதுச்சேரியில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
காவிரி மேலாண் வாரியம் அமைப்பது தொடர்பாக, டெல்லியில் நான்கு மாநில பிரதிநிதிகள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டத்தில், புதுச்சேரி சார்பில், தலைமைச் செயலர் அஸ்வனிகுமார், செயலர் அன்பரசு ஆகியோர் பங்கேற்கின்றனர். இதனிடையே, காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசை வலியுறுத்த, எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்து ஆலோசிக்க, முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது.கூட்டத்தில், உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளபடி, காரைக்கால் பகுதிக்கு 7 டி.எம்.சி. தண்ணீர் கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், 6 வார காலத்துக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி, மாநிலங்களுக்கான மாதாந்திர நீர்ப் பங்கீடு உறுதி செய்யப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் நாராயணசாமி, காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசுக்குத் தொடர்ந்து அழுத்தம் கொடுப்பது என்றும், அவ்வாறு நிறைவேற்றாவிட்டால், அடுத்ததாக அனைத்துக் கட்சி பிரதிநிதிகளையும், விவசாய சங்கப் பிரதிநிதிகளையும் டெல்லிக்கு அழைத்துச் சென்று கோரிக்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார்.