கபினி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருவதால், மேட்டூர் அணையின் நீர் மட்டம் 50 அடியை கடந்தது.

தென் மேற்கு பருவமழை தீவிரமடைந்ததையடுத்து,கர்நாடகாவில் காவிரி நீர் பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜ சாகர், கே.ஆர்.பி அணைகள் நிரம்பி வழிகின்றன. பாதுகாப்பு கருதி அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் கபினி அணையிலிருந்து தமிழகத்திற்கு திறந்துவிடப்படும் உபரிநீரின் அளவு 15 ஆயிரம் கன அடியிலிருந்து 23 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் 50 அடியை கடந்துள்ளது. ஆனால் அணைக்கு வரும் நீரின் அளவு 10 ஆயிரத்து 26 கனஅடியில் இருந்து, 4 ஆயிரத்து 586 கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.