காவிரி மேலாண்மை வழக்கில் மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு..!

809

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த காலக்கெடு நிறைவடைந்துள்ள சூழலில், மத்திய அரசுக்கு எதிராக, இன்று நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர தமிழக அரசு முடிவு செய்துள்ளது. காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்ச நீதிமன்றம் விதித்த 6 வார கால அவகாசம் நிறைவடைந்து விட்டது. இந்நிலையில், இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அடுத்த கட்ட நகர்வு, நிலைப்பாடு ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு, மத்திய அரசுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டிய மனு கடந்த சில நாள்களாக தயாரிக்கப்பட்டு வந்தது. இந்த மனு இறுதி வடிவம் பெற்றதை அடுத்து, தமிழக பொதுப் பணித் துறைச் செயலாளர் பிரபாகர், காவிரி தொழில்நுட்பக் குழுவின் தலைவர் சுப்பிரமணி உள்ளிட்டோர் டெல்லி விரைந்துள்ளனர். இதனையடுத்து, உச்ச நீதிமன்றப் பதிவாளர் அலுவலகத்தில், மத்திய அரசுக்கு எதிராக, நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான மனுவை தமிழக அரசு இன்று தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.