காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை

310

மேட்டூர் அணை திறப்பால் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு அபாயம் ஏற்பட்டுள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

5 ஆண்டுகளுக்குப்பிறகு மேட்டூர் அணை நிரம்பியதை அடுத்து, பொதுமக்கள், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதை அடுத்து, தற்போது மேட்டூர் அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் காவிரி ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய நீர்வள ஆணையம் தனது ட்விட்டர் மூலம் காவிரி ஆற்றின் கரையில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளது. மேட்டூர் அணையில் இருந்து 80 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து, ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி. தஞ்சாவூர் மற்றும் நாகை மாவட்டங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் வாய்ப்புள்ளதாக மத்திய நீர்வள ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் தமிழக அரசை மத்திய நீர்வள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.