நாடு முழுவதும் வழக்குகள் தேங்கியுள்ள நீதிமன்றங்களின் பட்டியலில் சென்னை உயர்நீதிமன்றம் 2வது இடத்தில் உள்ளது.

219

நாடு முழுவதும் உள்ள உயர் நீதிமன்றங்களில் 40 லட்சம் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், நீதிபதிகள் பற்றாக்குறையே இதற்கு காரணம் என்று கூறப்படுகிறது.
இந்தநிலையில், இந்திய நீதித்துறையின் ஆண்டறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, நாடு முழுவதும் உள்ள 24 உயர்நீதிமன்றகளில் ஆயிரத்து 79 நீதிபதிகள் பணியாற்ற வேண்டும் என்றும், ஆனால் 608 நீதிபதிகள் மட்டுமே பணியாற்றி வருவதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.

இதனால், மொத்த எண்ணிக்கையில் 44 சதவிகிதம் பற்றாக்குறை நிலவுவதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
நீதிபதிகள் பற்றாக்குறை காரணமாக 40 லட்சத்து 54 ஆயிரம் வழக்குகள் உயர்நீதிமன்றங்களில் தேங்கி உள்ளன.
இதில், 29 லட்சத்து 31 ஆயிரம் வழக்குகள் சிவில் வழக்குகள், 11 லட்சத்து 23 ஆயிரம் வழக்குகள் கிரிமினல் வழக்குகள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் அதிக அளவாக 9 லட்சத்து 24 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
அதற்கு அடுத்தபடியாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் சுமார் 3 லட்சத்துக்கும் மேல் வழக்குகள் நிலுவையில் இருப்பதாக நீதித்துறையின் ஆண்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.