சமாஜ்வாதி மூத்த தலைவர் ஆசம்கான் மீது வழக்குப்பதிவு..!

73

நடிகை ஜெயப்பிரதா குறித்துச் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய சமாஜ்வாதிக் கட்சி மூத்த தலைவர் ஆசம்கான் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

நடிகை ஜெயப்பிரதா உத்தரப்பிரதேசத்தின் ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதிக் கட்சி சார்பில் ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அண்மையில் பாஜகவில் சேர்ந்த ஜெயப்பிரதா ராம்பூர் தொகுதியில் சமாஜ்வாதிக் கட்சி வேட்பாளர் ஆசம்கானை எதிர்த்துப் போட்டியிடுகிறார். இந்நிலையில் ஒரு கூட்டத்தில் பேசிய ஆசம்கான், ஜெயப்பிரதாவைத் தனக்கு 17ஆண்டுகளாகத் தெரியும் என்றும், யாரும் அவர் மீது கைவைக்கத் தான் அனுமதித்ததில்லை எனவும் தெரிவித்தார். ஜெயப்பிரதாவின் உண்மையான முகத்தை அறியப் பொதுமக்களுக்கு 17ஆண்டுகள் ஆகியுள்ளதாகவும், அவர் காக்கிக் கால் சட்டை அணிந்தவர் என்பதைத் தான் 17நாளில் அறிந்துகொண்டதாகவும் தெரிவித்தார்.

இதையடுத்து ஆசம்கான் மீது காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜெயப்பிரதா ஆர்எஸ்எஸ் சார்புள்ளவர் என்பதைச் சுட்டிக்காட்டவே காக்கிக் கால்சட்டை எனத்தான் பேசியதாகவும், அதை ஊடகங்கள் திரித்துக் கூறிவிட்டதாகவும் ஆசம் கான் விளக்கமளித்துள்ளார். தன் மீது குற்றத்தை நிரூபித்தால் தான் போட்டியில் இருந்தே விலகிக்கொள்வதாகவும் ஆசம்கான் தெரிவித்துள்ளார்.