தமிழக அரசுக்கு எதிரான மத்திய அரசு மேல்முறையீட்டு மனு மீது விசாரணை..!

223

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிப்பது குறித்த தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரை செய்துள்ளது.

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற பேரறிவாளன் உட்பட 7 பேரை விடுவிக்க தமிழக அரசு எடுத்த நடவடிக்கைக்கு எதிராக மத்திய அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில், இன்று விசாரணைக்கு வந்த போது, 7 பேரை விடுவிக்க மறுத்த மத்திய அரசின் உத்தரவை எதிர்த்து, பேரறிவாளன் உட்பட 7 பேர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அப்போது, 7 பேரை விடுவிப்பது தொடர்பாக மத்திய அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்ற உச்ச நீதிமன்றம், தமிழக அரசின் கோரிக்கையை மீண்டும் பரிசீலிக்குமாறு மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும், 7 பேரின் விடுதலை எதிர்ப்பது தொடர்பான மத்திய அரசின் கூடுதல் ஆவணங்களை உச்சநீதிமன்றம் விசாரணக்கு ஏற்றுக்கொண்டது. இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுவிப்பதில் தங்களுக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ராகுல் காந்தி தரப்பில் தெரிவிக்கப்பட்ட பிறகும், மத்திய அரசு பிடிவாதமாக இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.