சீக்கிய அமைப்புகளின் கோரிக்கையை ஏற்றுக் கனடா அரசு நடவடிக்கை..!

129

காலிஸ்தான் தீவிரவாத இயக்கம், சீக்கியத் தீவிரவாதம் எனக் குறிப்பிடும் சொற்களைக் கனடா அரசு நீக்கியுள்ளது.

சீக்கியர்களுக்காகப் பஞ்சாபைத் தனிநாடாக்கிக் காலிஸ்தான் என அழைக்க வேண்டும் என்கிற குறிக்கோளுடன் காலிஸ்தான் இயக்கம் செயல்பட்டு வந்தது. இந்த அமைப்புக்கு இந்தியா தடை விதித்ததை அடுத்து இந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்கள் கனடா, அமெரிக்கா, பிரிட்டன் ஆகிய நாடுகளில் குடியேறினர். அங்கிருந்துகொண்டே பஞ்சாபைத் தனியாகப் பிரித்துக் காலிஸ்தான் நாடாக அறிவிப்பதற்கான கருத்து வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் காலிஸ்தான் இயக்கத்தைத் தீவிரவாத இயக்கம் எனக் குறிப்பிடுவதையும், சீக்கிய தீவிரவாதம் எனக் குறிப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் என அந்த அமைப்புகள் கனடா அரசுக்குக் கோரிக்கை வைத்திருந்தன. கனடாவில் நாடாளுமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டுச் சீக்கியர்களின் ஆதரவைப் பெறுவதற்காக அந்தக் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டது. இது இந்திய அரசுக்கு ஒரு பின்னடைவாகக் கருதப்படுகிறது.