உலகின் மிகப்பெரிய விமானம் | முதல்முறையாக விண்ணில் பறந்து வெற்றிகரமாக தரையிறக்கம்

195

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உலகின் மிகப்பெரிய விமானம், முதல்முறையாக விண்ணில் பறந்து வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது.

1975ஆம் ஆண்டில் பில் கேட்ஸ் உடன் இணைந்து, மைக்ரோசாப்ட் நிறுவனத்தைக் கூட்டாகத் தொடங்கியவர் பால் ஆலன். உலகின் மிகப்பெரிய விமானத்தை தயாரிக்க தீர்மானித்த இவர், விமானம் வானத்தில் பறந்தவாறு ராக்கெட்டுகளை விண்ணில் செலுத்தும் தொழில்நுட்பத்துடன் இருக்க வேண்டுமென எண்ணினார். அதன் விளைவாக கடந்த 2011ஆம் ஆண்டு புதிய நிறுவனத்தை தொடங்கிய பால் ஆலன், மிகப்பெரிய விமானத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டார். இந்நிலையில், விமானத்தின் வடிவமைப்பு, கட்டுமான பணிகள் முடிந்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. கலிபோர்னியாவில் உள்ள மோஜாவே ஏவுதளத்தில் இருந்து, இந்த மெகா விமானம் புறப்பட்டு சென்றது.

இரட்டை விமானத்தை போன்ற உடலமைப்புடன் 385 அடி அகலம், 238 அடி நீளம் கொண்ட இந்த விமானம், சுமார் 50 லட்சம் பவுண்டு எடை கொண்டதாகும். மோஜாவே பாலைவனப்பகுதியில் 17 ஆயிரம் அடி உயரத்தில் மணிக்கு 189 மைல் வேகத்தில் பறந்த விமானம், இரண்டரை மணி நேரத்திற்கு பிறகு வெற்றிகரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால், இந்த வரலாற்று சாதனைக்கு சொந்தக்காரராக கருதப்படும் பால் ஆலன், கடந்த ஆண்டு அக்டோபர் 15-ம் தேதி காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.