தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 36வது நினைவுநாளையொட்டி அவரது திருவுருவ சிலைக்கு அரசியல் தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை.

284

தமிழர் தந்தை என போற்றப்படும் சி.பா.ஆதித்தனாரின் 36-வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட்டது. சென்னை எழும்பூரில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு தினத்தந்தி குழும நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் ஆதித்தன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொழிலதிபர் வி.ஜி.சந்தோசம், முன்னாள் மேயர் சைதை துரைசாமி, தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுகரசர், தமிழக முன்னாள் காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, எச்.வசந்தகுமார், திமுக சார்பில் முன்னாள் எம்.பி. ஜெயதுரை, சிம்லா முத்துச்சோழன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய சமத்துவ மக்கள் கழக தலைவர் எர்ணாவூர் நாராயணன், புதிய நீதிக்கட்சியின் சார்பில் ஏ.சி.சண்முகம், தமாக சார்பில் ஞானதேசிகன், துணைத் தலைவர் கோவை தங்கம், பாமக சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் ஏ.கே.மூர்த்தி உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். மேலும், தொழிலதிபர்கள், நாடார் சங்க அமைப்புகள், வணிகர் சங்க அமைப்பு நிர்வாகிகள் ஆதித்தனார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் அமைந்துள்ள மாலைமுரசு அலுவலகத்தில், மாலைமுரசு, தேவியின் கண்மணி மற்றும் மாலைமுரசு தொலைக்காட்சி அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் ஆதித்தனாரின் திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 36வது நினைவு தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் அருகேயுள்ள காயாமொழியில், அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. ராமச்சந்திர ஆதித்தனாரின் திருமண மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட சி.பா.ஆதித்தனாரின் திருவுருவப் படத்திற்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னர், பொதுமக்களுக்கு அன்னதானம் மற்றும் இலவச வேஷ்டி, சேலைகள் வழங்கப்பட்டன. மேலும், ஆதித்தனாரின் நினைவு தினத்தை முன்னிட்டு விஜயசிங் குழுவின் பக்தி இன்னிசை கச்சேரியும் நடைபெற்றது.
வேலூர் மாலைமுரசு அலுவலகத்தில் சி.பா. ஆதித்தனார் உருவப்படத்துக்கு அதிமுக புரட்சி தலைவி அம்மா ஓ.பிஎஸ் அணியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் செங்குட்டுவன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் மாலைமுரசு அலுவலர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.