நடத்துனர் இல்லாத பேருந்து சேவை அடுப்பில்லாமல் உணவு சமைப்பதற்கு சமம்

நடத்துனர் இல்லாத பேருந்து சேவை மோட்டார் வாகன சட்டத்திற்கு புறம்பானது என தமிழக போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்திரராஜன் தெரிவித்துள்ளார்.

கோவையில் நடைபெற்ற சிஐடியு மண்டல மாநாட்டில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர் சங்க மாநில தலைவர் சவுந்திரராஜன் கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மானிய கோரிக்கையில் போக்குவர்த்து கழகத்தை மேம்படுத்தவோ, ஊழியர்களின் பிரச்சனை குறித்தோ போக்குவரத்து துறை அமைச்சர் பேசவில்லை என்றார். தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவை தொகை ஐந்தாயிரம் கோடியில் இருந்து 6 ஆயிரம் கோடியாக உயர்ந்துள்ளதை சுட்டிக்காட்டிய அவர், நடத்துனர் இல்லாத பேருந்து சேவையை ரத்து செய்ய வேண்டும் என்றார். நடத்துனர் இல்லாத பேருந்து சேவை, அடுப்பில்லாமல் உணவு சமைப்பதற்கு சமம் எனக்கூறிய அவர், மோட்டார் வாகன சட்டத்தின் படி நடத்துனர் இல்லாமல் பேருந்துகளை இயக்கமுடியாது என்றார்.