பேருந்து கட்டணத்தின் விவரங்களை பேருந்துகளில் ஸ்டிக்கராக ஒட்ட வேண்டும் என மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு..!

198

உயர்த்தப்பட்டுள்ள பேருந்து கட்டணத்தின் விவரங்களை பேருந்துகளில் ஸ்டிக்கராக ஒட்ட வேண்டும் என்று மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

திண்டுக்கல் மாவட்டம், நாகல்நகரைச் சேர்ந்த நல்லயம்பெருமாள் என்பவர் மதுரை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் “தமிழக அரசு கடந்த 17.11.2011–ல் பேருந்து கட்டணத்தை மாற்றி அமைத்தது’’ என்று கூறியிருந்தார். அதன்படி திண்டுக்கல் – மதுரை இடையேயான கட்டணம் 18.50 காசுகளில் இருந்து 28 ரூபாயாகவும், திண்டுக்கல் – தேனி இடையேயான கட்டணம் 22.50 காசுகளில் இருந்து 35 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது என்று தெரிவித்திருந்தார்.

அதேசமயம் பேருந்துகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தைவிட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது எனவும் மதுரை உள்ளிட்ட சில பகுதிகளில் குறைந்தபட்ச கட்டணம் என்ற ஒன்று இல்லவே இல்லை எனவும் மனுவில் கூறியிருந்தார். மேலும் தமிழகம் முழுவதும் அரசு உத்தரவுப்படி நிர்ணயிக்கப்பட்ட ஒரே மாதிரியான கட்டணத்தை வசூலிக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், “உயர்த்தப்பட்ட கட்டண விவரங்களை ஒவ்வொரு பேருந்துகளிலும் எழுதியோ அல்லது ஸ்டிக்கர் ஒட்டியோ வைத்திருக்க வேண்டும்” என்று தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.