அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்கள் வீசி தாக்குதல்..!

344

தமிழகத்தில் பல்வேறு இடங்களில் மர்ம நபர்கள் அரசு பேருந்துகள் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய சம்பவங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைவையொட்டி தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பேருந்து சேவை குறைவாகவே இயக்கப்பட்டது. இந்நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டம் அருகே சென்னையில் இருந்து திருவனந்தபுரத்துக்கும், திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவிற்கு இயக்கப்பட்ட இரண்டு அரசு பேருந்துகள் மீது மர்மநபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று குளச்சலில் இருந்து திருவனந்தபுரம் மற்றும் நாகர்கோவிலுக்கு சென்ற அரசு பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதையடுத்து பேருந்துகள் போலீஸ் பாதுகாப்புடன் இயக்கப்பட்டன.

கோவையில் தனியார் மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் இரண்டு தனியார் பள்ளி பேருந்துகள் உள்பட 3 பேருந்துக்கள் மீது மர்ம நபர்கள் கல்வீசி தாக்குதல் நடத்தினர். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதே போன்று வேலூர் மாவட்டம் ஆம்பூரில் இருந்து குடியாத்தம் சென்ற அரசு பேருந்து மீது மர்ம நபர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதுதொடர்பாக விசாரணை நடத்திய போலீசார், இதில் ஈடுபட்டதாக கூறி ஆம்பூர் நகர பாஜக தலைவர் உள்பட 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.