தமிழக சட்டசபையில் 2016-17 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல். ஏழை, எளியவர்களுக்கு பத்து லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்று அறிவிப்பு

147

அமைதி, வளம், வளர்ச்சி என்ற குறிக்கோள்களை அடைய பல்வேறு வளர்ச்சித்திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசின் 2016 – 17 ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏழை, எளியவர்களுக்கு பத்து லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக சட்டசபையில் 2016-17 ஆம் ஆண்டுக்கான திருத்தப்பட்ட வரியில்லா பட்ஜெட்டை நிதியமைச்சர் ஒ.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். இதில், கிராமப்புற வறுமை ஒழிப்புக்கு 351 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பள்ளிக் கல்வித் துறைக்கு 24 ஆயிரத்து 130 கோடி ரூபாய் நிதியும், உயர்கல்வித் துறைக்கு 3 ஆயிரத்து 679 கோடி ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டுள்ளது. காவலர்களுக்கு 2 ஆயிரத்து 673 வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

வரும் கல்வியாண்டில் மாணவர்களுக்கு ஐந்து லட்சம் மடிக்கணினிகள் வழங்கப்படும் என்றும், ஏழை, எளியவர்களுக்கு பத்து லட்சம் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

420 கோடி ரூபாய் செலவில் சூரிய மின் சக்தி வசதியுடன் கூடிய 20 ஆயிரம் வீடுகள் கட்டப்படும் என கூறிய நிதியமைச்சர், மூன்றரை லட்சம் இலவச பட்டா வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
சாலைப்பணிகளுக்கு 300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் நிதியும், மின்சார மானியத்திற்காக 9 ஆயிரத்து 7 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பட்ஜெட்லில் கூறப்பட்டுள்ளது.

அடுத்த ஒராண்டில் 2 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் என்றும்,
7-வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த உயர்நிலைக் குழு அமைக்கப்படும் என பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாற்று திறனாளிகளுக்கு ஆயிரம் பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்படும் என்று கூறிய நிதியமைச்சர், நாட்டிலேயே முதல் முறையாக கடற்கரை ஊர்க்காவல் படைக்கு 500 மீனவர் இளைஞர்கள் சேர்க்கப்படுவார்கள் என்றும் தெரிவித்தார்.

மேலும், இந்தாண்டு இறுதிக்குள் சென்னயில் முதலாவது சுரங்க வழி மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் மாதம் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.