நாடு முழுவதும் ஆப்டிக்கல் பைஃபர் கேபிள் பதிக்கப்படுகின்றன : கேபிள் பதிக்க வாடகை தர வேண்டும் என நில நிர்வாகம் அரசாணை

137

தொலைபேசி கேபிள் பதிப்பதற்காக வாடகை கேட்கும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு எதிராக பிஎஸ்என்எல் தொடர்ந்துள்ள வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர் நீதிமன்றத்தில் பிஎஸ்என்எல் ஈரோடு துணைப் பொது மேலாளர் தாக்கல் செய்த மனுவில், பிஎஸ்என்எல் நிறுவனம் நாடு முழுவதும் உள்ள நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறங்களிலும் தொலைபேசி மற்றும் இணையதள சேவைகள் கிடைக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்துடன் செயல்பட்டு வருகிறது. இதற்காக ஓஎஃப்சி எனப்படும் ஆப்டிக்கல் பைஃபர் கேபிள்கள் பதிக்கப்படுகின்றன. இதற்காக தோண்டப்படும் குழிகளை மீண்டும் பழைய நிலைக்குக் கொண்டு வருவதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு மறுசீரமைப்பு கட்டணம் செலுத்தப்படுகிறது. இந்நிலையில் தனியார் நிறுவனங்களும் எங்களைப் போன்று கேபிள்களை பதித்துள்ளன.

இந்த நிறுவனங்கள் கேபிள் பதித்ததற்காக வாடகை செலுத்த வேண்டும் என நில நிர்வாக ஆணையம் கடந்த 2001-ஆம் ஆண்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அந்த அரசாணையில் பிஎஸ்என்எல் நிறுவனத்தின் பெயர் இல்லை. இந்த அரசாணையின்படி பூமிக்கடியில் கேபிள் பதித்ததற்காக வாடகை தர வேண்டும் என உள்ளாட்சி அமைப்புகள் எங்களை நிர்ப்பந்தம் செய்தன. எனவே, எங்களிடமிருந்து வாடகை கேட்க தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி ஆர்.மகாதேவன், தமிழக அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்து உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த வாரத்துக்கு ஒத்திவைத்தார்.