பிஎஸ்என்எல் வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி மாறன் சகோதரர்கள் தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு..!

372

சட்டவிரோத தொலைபேசி இணைப்பு முறைகேடு வழக்கில் மாறன் சகோதரர்கள் உள்ளிட்டோரை விடுவிக்க கோரிய வழக்கில் சென்னை சிபிஐ நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது.மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி, சன் தொலைக்காட்சிக்கு பிஎஸ்என்எல் இணைப்புகளை முறைகேடாக வழங்கி, அரசுக்கு பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இதுதொடர்பாக, சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, மாறன் சகோதரர்கள் உட்பட 7 பேருக்கு எதிராக சிபிஐ போலீஸார், சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளனர்.இதனையடுத்து, இந்த வழக்கு விசாரணை சென்னை சி.பி.ஐ நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க கோரி, குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் சார்பில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு மீதான விசாரணையில், மாறன் சகோதரர்களுக்கு எதிராக வலுவான ஆதாரங்கள் உள்ளதால், வழக்கில் இருந்து யாரையும் விடுவிக்கக்கூடாது என சிபிஐ தரப்பில் வாதாடப்பட்டது.இதனையடுத்து, வழக்கில் தீர்ப்பை 14 ஆம் தேதி அறிவிப்பதாக நீதிபதி நடராஜன் தெரிவித்திருந்தார். இதனைத்தொடர்ந்து, இந்த வழக்கில் இன்று காலை 10.30 மணிக்கு தீர்ப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.