பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்தக் கூடாது என்று ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

275

ஐரோப்பிய ஒன்றியத்தில் நீடிப்பதா, வேண்டாமா என்பது குறித்து பிரிட்டனில் நடந்த பொதுவாக்கெடுப்பில், விலகுவதாக முடிவெடுக்கப்பட்டது. ஆனால், இடதுசாரிகள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரிட்டனின் பல நகரங்களில் போராட்டம் நடத்தி வருகின்றனர். பிரிட்டன் மீண்டும் இணைவது குறித்து பரிசீலனை செய்யவேண்டும் என்று அவர்கள் கோரியுள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தில் நிலைத்திருக்கவேண்டும் என்று வலியுறுத்திவந்த பிரதமர் டேவிட் கெமரூன், அடுத்த 3 மாதங்களில் பதவி விலகப்போவதாக அறிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் ஜான் கிளவுட் ஜங்கர், பிரிட்டனின் வெளியேற்றம் வருத்தம் அளிக்கிறது எனினும், அந்நாட்டு மக்களின் முடிவை தான் மதிப்பதாக கூறியுள்ளார். இனிமேல், 27 நாடுகளுடன் ஐரோப்பிய ஒன்றியம் சிறப்பாக செயல்படும் என்று தெரிவித்துள்ள ஜான் கிளவுட், பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை தாமதப்படுத்தக் கூடாது என்றும் கூறியுள்ளார். அவ்வாறு தாமதிக்க நேர்வது, ஐரோப்பிய ஒன்றியத்தின் ஸ்திர தன்மையைப் பாதிக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.