பிரிட்டனில் நடைபெற்ற வாக்கெடுப்பு முடிவின் எதிரொலியாக, இன்றைய பங்குச் சந்தையில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து தங்கத்தின் விலை சவரன் ஒன்று ஆயிரத்து 100 ரூபாயால் அதிரடியாக உயர்ந்தது.

242

ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரிட்டன் வெளியேறவேண்டும் என்பதை, நேற்றைய தினம் அங்கு நடைபெற்ற வாக்கெடுப்பு முடிவு உறுதிப்படுத்தியுள்ளது. இதன் எதிரொலியாக, மும்பையில் தேசிய பங்குச் சந்தை தொடங்கிய சிறிது நேரத்திலேயே சென்செக்ஸ் மற்றும் நிப்டி புள்ளிகளில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது.

மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 26 புள்ளிகள் குறைந்து 25 ஆயிரத்து 981 ஆக நிலைத்தது. அதேபோன்று, தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிப்டி 328 புள்ளிகள் குறைந்து 7 ஆயிரத்து 942 ஆக நிலைத்தது.

இதன் எதிரொலியாக, தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை, சவரன் ஒன்று, ஆயிரத்து 100 ரூபாயால் உயர்ந்துள்ளது. அதன்படி, ஒரு கிராம் தங்கத்தின் விலை 2 ஆயிரத்து 965 ரூபாயாகவும், ஆபரணத் தங்கத்தின் விலை 23 ஆயிரத்து 720 ரூபாயாகவும் உள்ளது.

பங்குச் சந்தையின் திடீர் சரிவு காரணமாக, பிரிட்டன் நாணயமான பவுண்டின் விலை, வரலாறு காணாத வகையில் 9 சதவீதத்தால் வீழ்ச்சி கண்டுள்ளது. 1985-ஆம் ஆண்டுக்குப் பின்னர், பிரிட்டன் நாணயத்தின் விலை, இத்தகைய வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக பொருளாதார நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.