நடு வழியில் பிரேக் டவுன் ஆன பேருந்து | பயணிகளை தாக்கிய பேருந்து நிறுவன ஊழியர்கள்

334

ஆம்னி பேருந்து ஒன்று பிரேக் டவுன் ஆனதால், மாற்று ஏற்பாடு கேட்ட பயணிகள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் கேரளாவில் நடந்துள்ளது.

கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில் இருந்து பெங்களூருவுக்கு நேற்று முன்தினம் இரவு, கல்லடா டிராவல்ஸ் என்ற நிறுவன பேருந்து புறப்பட்டுள்ளது. வேகமாக சென்று கொண்டிருந்த பேருந்து, நடுவழியில் ஹரிபாட் என்ற இடத்தில பிரேக் டவுன் ஆனது. பேருந்தை ஒரு இருட்டான பகுதியில் டிரைவர் நிறுத்தியபின், தங்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தருமாறு பயணிகள் கேட்டுள்ளனர். இதனால் வாக்குவாதம் ஏற்படவே, போலீசார் அழைக்கப்பட்டனர். பின்னர் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார், பயணிகளுக்கு மாற்று பேருந்து ஏற்பாடு செய்துள்ளனர்.

பயணிகளை ஏற்றி சென்ற பேருந்து வியட்டில்லா என்ற பகுதிக்கு சென்றபோது, ஆம்னி பேருந்து ஊழியர்கள் சிலர் பேருந்தில் திடீரென ஏறி, டிரைவரிடம் வாக்குவாதம் செய்த பயணிகளை தாக்கியுள்ளனர். இந்த சம்பவத்தை வீடியோ எடுத்த பயணியையும் பேருந்து நிறுவனம் மிரட்டியதாக கூறப்படுகிறது. பயணிகளை ஊழியர்கள் தாக்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி, விஷயம் பெரிதாகவே, காவல் துறையினர் பயணிகளை தாக்கிய ஊழியர்களை கைது செய்தனர்.