போதை பொருள் கடத்தி, மரண தண்டனை பெற்ற குர்தீப் சிங் தற்காலிகமாக தப்பினார்! இந்தோனேசியாவில் ஊசலாடும் உயிர்!!

248

ஜாகர்த்தா, ஜூலை,30–
போதைபொருள் கடத்தியதாக பஞ்சாப் மாநிலத்தை சேர்ந்த குர்தீப் சிங்கிற்கு இந்தோனேசிய அரசு மரணதண்டனை விதித்தது. தண்டனை நிறைவேற்றப்படாமல் கடைசி நேரத்தில் நிறுத்தப்பட்ட போதிலும், இந்த தற்காலிக நிம்மதி நிலைக்குமா என்ற கேள்வி விஸ்வரூபமெடுத்துள்ளது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தரை சேர்ந்தவர் குர்தீப் சிங் (வயது48) மனைவி குல்விந்தர் கவுருடன் நிம்மதியாக வாழ்ந்தவர் வாழ்வில் கடந்த 2002–ம் ஆண்டு புயல் வீசியது. நியூசிலாந்து நாட்டில் ஓட்டுனர் வேலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில், இந்தோனேசியா வழியாக பயணம் மேற்கொண்டார்.
உத்தரபிரதேசத்தை சேர்ந்த ஒரு ஏஜெண்டுமூலமாக வெளிநாடு சென்ற இவருடைய பாஸ்போர்ட் ஆவணத்தை தராமல் அந்த ஏஜெண்டு காலம் தாழ்த்தினார். ஹெராயின் என்ற போதை மருந்து 300 கிராம் அளவிற்கு கடத்தினால் பாஸ்போர்ட் தருவதாக நிபந்தனை விதித்தார்.இதில் பிடிபட்ட குர்தீப் சிங்கிற்கு கடந்த 2005–ம் ஆண்டு மரண தண்டனை என இந்தோனேசிய நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திரிசங்கு நிலை!
இதையடுத்து கடந்த 10 ஆண்டுகளாக குர்தீப் சிங்கின் மனைவி உள்பட குடும்ப உறுப்பினர்கள், ஆம்னஸ்டி இன்டர்நேசனல் என்ற சர்வதேச மன்னிப்பு சபை, ஐ.நா. சபை பொதுச்செயலாளர் பான் கிமூன், நம்நாடு உட்பட பல நாடுகளின் வெளியுறவு துறை அதிகாரிகள் என பலதரப்பினரும் குர்தீப்சிங் மற்றும் 13 பேரின் மரண தண்டனைக்கு எதிராக குரல் கொடுத்து வருகின்றனர்.
இதற்கிடையே 2 நாட்களுக்கு முன் குர்தீப் சிங் , ஒரு பாகிஸ்தானியர், நைஜீரியா, நாட்டை சேர்ந்த 8 பேர், 4 இந்தோனேசியர் என 14 பேரும் கொலைக்களத்திற்கு கொண்டுசெல்லப்பட்டனர். அங்கு நைஜீரியாவை சேர்ந்த 3 பேர், ஒரு இந்தோனேசியர் என 3 பேர் சுடப்பட்டு,மரணதண்டனை நிறைவேற்றப்பட்டது.
குர்தீப் சிங் உட்பட 10 பேரும் மீண்டும் சிறைக்கு கொண்டுவரப்பட்டுஅடைக்கப்பட்டனர். ஆனால் இது தற்காலிக நிம்மதியே என்றும், எந்த நிமிடமும் மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என்றும் திரிசங்கு நிலை உள்ளது.
பிடிவாதம்!
இந்தோனேசிய அதிபர் ஜோக்கோவிடோ, மற்றும் அந்த நாட்டின் அரசு தலைமை வழக்கறிஞரான முகமது பிரசாட்யோவும் போதைப்பொருள் கடத்துபவர் யாராக இருந்தாலும் மரண தண்டனை நிச்சயம் என பிடிவாதமாக உள்ளனர். இதனால் குர்தீப் சிங் தலைக்கு மேல் நூல் கயிற்றில் கத்தி ஊசலாடும் நிலையில், அவரது உயிர் தப்புமா என்ற கேள்விக்குறி பெரிய அளவில் எழுந்துள்ளது.