உலகம் முழுவதும் போயிங் 737 விமானங்கள் பறக்க தடை!

91

போயிங் 737 விமானங்களில் பாதுகாப்பு குறித்து கேள்வி எழும்பியதை அடுத்து, உலக முழுவதும் இயக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த பிரபல விமான தயாரிப்பு நிறுவனம் போயிங் 737 மேக்ஸ் 8 ரக பயணிகள் விமானத்தை அறிமுகம் செய்தது. இந்த வகை விமானத்திற்கு அதிக வரவேற்பு கிடைத்தை அடுத்து, 100-க்கும் மேற்பட்ட போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களை தயாரித்து போயிங் நிறுவனம் விற்பனை செய்தது. இதனிடையே, கடந்த ஆண்டு இந்தோனேசியாவின் லயன் ஏர் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம், புறப்பட்டு சில நிமிடங்களில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 189 பேர் உயிர் இழந்தனர். அதே போல் எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமான போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் கடந்த 10-ந் தேதி விபத்துக்குள்ளது.

இதில் பயணித்த 157 பேரும் உயிரிழந்தனர். தொடர்ந்து 2 பெரும் விபத்துகளை சந்தித்ததால், போயிங் 737 மேக்ஸ் ரக விமானங்களின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுந்தது. இந்தநிலையில், எத்தியோப்பியா விமான விபத்து தொடர்பாக புதிய ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் சேவையை நிறுத்துவதாக அமெரிக்கா அறிவித்தது. இதனையடுத்து, உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானங்களின் சேவையை நிறுத்திவைப்பதாக ‘போயிங்’ நிறுவனம் தெரிவித்துள்ளது.