பீகார் அரசியலில் புயலைக்கிளப்பிய கால்நடை தீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு!

581

பீகார் அரசியலில் புயலைக்கிளப்பிய கால்நடை தீவன ஊழல் வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ் முதலமைச்சராக இருந்தபோது, அம்மாநிலத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இருந்த ஜார்க்கண்ட்டின் தியோஹர் மற்றும் சாய்பாசா ஆகிய மாவட்டங்களில் நடைபெற்ற கால்நடை தீவன ஊழல் வழக்குகள் குறித்து சிபிஐ விசாரணை நடைபெற்றது.
நாட்டை அதிர வைத்த இந்த ஊழல் வழக்குகளில், சாய்பாசா மாவட்ட கருவூல பணத்தை முறைகேடாக எடுத்த வழக்கில், உச்சநீதிமன்றம் லாலு பிரசாத் யாதவ் மற்றும் ஜெகநாத் மிஸ்ரா உள்ளிட்டவர்களுக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து, சிறையில் அடைக்கப்பட்ட லாலு பிரசாத், தற்போது ஜாமீனில் இருந்து வருகிறார்.
இதனிடையே, தியோஹர் மாவட்ட கருவூலத்தில் நடைபெற்ற முறைகேடு தொடர்பான வழக்கு விசாரணை, ஜார்க்கண்ட் மாநிலத்தில் உள்ள ராஞ்சி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் சாட்சியங்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டுள்ளநிலையில், இன்று தீர்ப்பு வெளியாகிறது. சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஷிவ்பால்சிங் இன்று காலை பத்தரை மணிக்கு தீர்ப்பை அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.