நாடு முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டம்..!

248

எரிபொருள் விலையைக் கண்டித்து, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நடத்தி வரும் முழுஅடைப்பு போராட்டம் காரணமாக, தமிழகத்தில் எந்த பாதிப்பும் இல்லை என தகவல்கள் தெரிவிக்கின்றன.

பெட்ரோல், டீசல் விலை உயர்வைக் கண்டித்தும், எரிபொருளை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டு வர வலியுறுத்தியும் நாடு முழுவதும் இன்று முழுஅடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டம் கார்ணமாக, புதுச்சேரியில் அரசு மற்றும் தனியார் பேருந்துகள், ஆட்டோ, வேன்கள் எதுவும் இயக்கப்படவில்லை. இந்த நிலையில், பொதுச்சொத்துகளுக்கு சேதம் விளைவித்தால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புதுச்சேரி ஆளுனர் கிரண்பேடி எச்சரித்துள்ளார். கர்நாடகாவிலும் பேருந்துகள் இயங்கவில்லை. மேலும், கர்நாடகா செல்லும் தமிழக பேருந்துகள் அனைத்தும் ஓசூர் எல்லையில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பெங்களுர் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பயணிகளும், பொதுமக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கேரளாவிலும், முழு அடைப்பு போராட்டம் காரணமாக, வாகனங்கள் இயங்கவில்லை. கன்னியாகுமரியில் இருந்து செல்லும் பேருந்துகள் களியக்காவிளையில் நிறுத்தப்பட்டுள்ளன.

குமுளி, போடிமெட்டு உள்ளிட்ட மாநில எல்லைப்பகுதிகள் வரை அரசுப்பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஒடிசாவில் சம்பல்பூர், புவனேஷ்வர் உள்ளிட்ட பகுதிகளில் எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்து, ரயில் மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. மேலும், மும்பை, ஐதராபாத், திருவனந்தபுரம், கவுஹாத்தி உட்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்களில் எதிர்க்கட்சியினர் மத்திய அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர். இந்நிலையில், பேராட்டத்தின் எதிரொலியாக ராஜஸ்தானில் பெட்ரோல் டீசல் மீதான விற்பனை வரி 4 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பெட்ரோல் மீதான வரியை 30 சதவீதத்திலிருந்து 26 சதவீதமாகவும், டீசல் மீதான 22 சதவீத வரியை 18 சதவீதமாகவும் குறைத்து, ராஜஸ்தான் மாநில முதலமைச்சர் வசுந்தரா ராஜே அறிவித்துள்ளார். இதனிடையே, தமிழகத்தில் சென்னை உட்பட அனைத்துப்பகுதிகளிலும் வழக்கம் போல பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

எதிர்க்கட்சிகளின் போராட்டம் காரணமாக, ஒருசில பகுதிகளில் கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. ஆட்டோக்கள், லாரிகள் ஓடவில்லை. திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டதை அடுத்து, சுற்றுவட்டார விவசாயிகள் யாரும் காய்கறிகளைக் கொண்டுவரவில்லை. இதனால், காய்கறி மார்க்கெட் வெறிச்சோடி காணப்பட்டது. போராட்டம் காரணமாக, ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில், இரண்டு கோடி ரூபாய் வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். தூத்துக்குடியில், முழுஅடைப்பு போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை.

இதனால், 10 ஆயிரம் மீனவ குடும்பங்கள் நேரிடையாகவும், மறைமுகமாக தொழிலாளர்கள் 25 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், தமிழக அரசுக்கு பத்து கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் விசைப்படகு உரிமையாளர்கள் சங்க செயலாளர் போஸ்கோ கூறினார். கன்னியாகுமரியிலும் குளச்சல், தேங்காபட்டிணம் விசைப்படகு மீனவர்கள் இன்று கடலுக்கு செல்லவில்லை. தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்ட மீனவர்களும் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.