பிசிசிஐ- இல் உறுப்பினராகிறது புதுச்சேரி கிரிக்கெட் சங்கம்!

267

புதுச்சேரி,ஜூலை.26–
லோதா கமிட்டி பரிந்துரையையடுத்து, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் உறுப்பினராகும் வாய்ப்பை புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் பெற்றுள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் அனைத்து மாநிலங்களும் முழுநேர உறுப்பினராக உள்ளன. அது தவிர கோவா, டெல்லி போன்ற யூனியன் பிரதேசங்களும் முழுநேர உறுப்பினராக உள்ளன. இதன் மூலம் அந்த மாநில அணிகள் ரஞ்சி டிராபி போன்ற பல்வேறு கிரிக்கெட் போட்டிகளில் பங்கேற்று வருகின்றன.
ஆனால் யூனியன் பிரதேசமான புதுவை பிசிசிஐ-இல் உறுப்பினராக இல்லை. இதனால் புதுவை அணியால் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்க முடியாது.
தமிழக கிரிக்கெட் சங்கம் சார்பில் நடைபெறும் போட்டிகளில், ஒரு மாவட்டம் என்ற ரீதியில் புதுச்சேரி அணி விளையாடி வருகிறது.
இதனால் மாவட்ட அளவிலான போட்டிகள் வரையிலேயே புதுவை கிரிக்கெட் வீரர்கள் செல்கின்றனர். அவர்களால் தேசிய அளவில் விளையாடி, இந்திய அணியிலோ ஐபிஎல் அணியிலோ இடம் பிடிக்க முடிவதில்லை.
இந்த நிலையில் புதுவையில் உள்ள கிரிக்கெட் சங்கத்தை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தில் உறுப்பினராக சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. இது தொடர்பாக புதுச்சேரி மாநில விளையாட்டுக் கவுன்சிலில் உறுப்பினராக உள்ள புதுச்சேரி கிரிக்கெட் சங்கம் முயற்சி செய்து வருகிறது.
லோதா கமிட்டி பரிந்துரை
இதனால் பிசிசிஐ இல் புதுவையும் சேர்ந்துவிடும். அதன் பின்னர் ரஞ்சி டிராவி போன்ற பல்வேறு போட்டிகளில் புதுச்சேரி கிரிக்கெட் அணி விளையாடும் நிலை ஏற்படும்.
இந்த நிலையில் இந்திய கிரிக்கெட்டில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து லோதா கமிட்டி அளித்துள்ள அறிக்கை ஏற்கப்பட்டுள்ளது.
அதில் பிசிசிஐ-இல் யூனியன் பிரதேசங்களை சேர்க்கலாம் என்றும், சர்வதேச கிரிக்கெட் மைதானங்கள் இல்லாத மாநிலங்களுக்கு சார்புநிலை உறுப்பினர் (அசோசியேட் மெம்பர்) அந்தஸ்தை கொடுக்கலாம் என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் சர்வதேச கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்ட பிறகு முழுநேர உறுப்பினர் அந்தஸ்தை அவற்றுக்கு தர வேண்டும் என்று கோரப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து 6 மாதங்களுக்குள் நடவடிக்கை என்றும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.