தமிழகம், புதுச்சேரியில் 7000 க்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் கண்டுபிடிப்பு பார் கவுன்சில் நடவடிக்கை

321

சென்னை, ஜூலை 29

தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்டு வரும் வழக்கறிஞர்களின் சான்றிதழ் சரிபார்ப்பில், 7000க்கும் மேற்பட்ட போலி வழக்கறிஞர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர்கள் சட்டதிருத்தத்தை எதிர்த்து தமிழகத்தில் பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. ரெயில் மறியல், நீதிமன்ற முற்றுகை, தொடர் விடுப்பு போராட்டங்களை 126 வழக்கறிஞர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். இதையடுத்து சஸ்பெண்டை ரத்து செய்ய வேண்டும் இல்லாவிட்டால் நாடு தழுவிய போராட்டம் நடத்தப்படும் என்று வழக்கறிஞர்கள் எச்சரிக்கை விடுத்தனர். இந்நிலையில் அகில இந்திய பார் கவுன்சில் தலைவர் மதன் குமார் மிஸ்ரா கூறியபோது, தொடர்ந்து போராட்டம் நடத்தினால் வழக்கறிஞர்கள் மேலும் சஸ்பெண்ட் செய்யபப்டுவார்கள், இந்தியாவில் 30 சதவீதம் போலி வழக்கறிஞர்கள் இருக்கின்றனர் என்று கூறினார்.

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை, வழக்கறிஞர்கள் பதிவை, பார் கவுன்சில் சரிபார்க்க வேண்டும். அதற்காக, கல்வி சான்றிதழ்களை, பார் கவுன்சிலிடம் வழக்கறிஞர்கள் சமர்ப்பிக்க வேண்டும். கவுன்சிலில் ஏற்கனவே பதிவு செய்தவர்கள், புதிதாக பதிவு செய்தவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும்படி, அனைத்து மாநிலங்களிலும் உள்ள பார் கவுன்சிலுக்கு, அகில இந்திய பார் கவுன்சில் ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. கடந்த, 2015ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றமும் இது தொடர்பான உத்தரவை பிறப்பித்திருந்தது. அதன்படி கடந்த ஜூன் மாதத்திற்குள் வழக்கறிஞர்கள் சான்றிதழ்களை சமர்பித்திருக்க வேண்டும். ஆனால் தமிழகம் புதுச்சேரியில் ஒட்டுமொத்தமாக உள்ள 90 ஆயிரம் வழக்கறிஞர்களில் 16 ஆயிரம் பேர் மட்டுமே சான்றிதழ்களை முறையாக சமர்பித்திருந்தனர். இதனையடுத்து உச்சநீதிமன்றம் இதற்கான கால அவகாசத்தை மேலும் 3 மாதம் நீட்டித்துள்ளது.

இந்நிலையில் தமிழ்நாடு பார் கவுன்சில் மேற்கொண்ட ஆய்வில், 1961 முதல் 1985 ஆண்டுகளில் வழக்கறிஞர்களாக பதிவு செய்தவர்களில் 2000க்கும் மேற்பட்டோரின் சான்றிதழ்களும், அதற்கு பிறகு பதிவு செய்த பல நூறு வழக்கறிஞர்களின் சான்றிதழ்களும் காணாமல் போனதாக பார் கவுன்சிலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் அனுப்பிய கடிதங்களுக்கு பதில் அனுப்பவில்லை என்று கூறப்படுகிறது. பலர் திறந்தவெளி பல்கலைக்கழகம் மூலம் நேரடியாக முதுகலை பட்டம் பெற்று, அதன்பின் சட்டப் படிப்பு முடித்து பதிவு செய்த விபரங்களும் வெளிச்சத்திற்கு வந்துள்ளன. இது தண்டனைக்குரிய குற்றம் என்று உச்சநீதிமன்றம் கூறுகிறது. தற்போது வரை நடந்த சான்றிதழ் சரிபார்ப்பில், 7௦௦௦க்கும் மேல் போலி வழக்கறிஞர்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இத்தகைய போலி வழக்கறிஞர்கள் பார் கவுன்சிலில் இருந்து நீக்கப்படுவதுடன், அவர்கள் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்து வருகிறது.